Saturday, 15 December 2012

கலவைக்காய் கூட்டு


தேவையான  பொருட்கள் :


1. பாகற்காய்    -  6  துண்டுகள் (50 கிராம் )

2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு   -  50 கிராம்

3.  பரங்கிக்காய்   -  50 கிராம்

4.  பூசணிக்காய்   -  50 கிராம்

5.  மொச்சை (தோலுரித்தது)  -  1 கப்

6.  அவரைக்காய்   -  5

7.  வாழைக்காய்  -  1/2 காய் (பாதி வாழைக்காய் )

8.  பீன்ஸ்  -  10 

9.  கேரட்  -  1 

10. பச்சை மிளகாய்   -  1 

11.  தேங்காய்த்துருவல்   -  1 கப்

12.  சீரகம்   -  1  தேக்கரண்டி

13.  கடுகு  -  1/2  தேக்கரண்டி

14.  கடலைப்பருப்பு  -  1  மேஜைக்கரண்டி

15.  தனியா  -  1  மேஜைக்கரண்டி

16.  எண்ணெய்  - தாளிக்க தேவையான அளவு

17.  உப்பு -  தேவையான அளவு

18.  கறிவேப்பிலை  - சிறிதளவு.



செய்முறை:


எல்லா காய்களையும்   நன்றாக   கழுவி  சுத்தம் செய்து ,  சம அளவாக 

நறுக்கிக்கொள்ளவும் .  பிறகு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும் .


கடாயில்  எண்ணெய்  விட்டு  சீரகம், பச்சை மிளகாய் , தனியா ,

கடலைப்பருப்பு , தேங்காய்த்துருவல்   ஆகியவற்றை வறுத்து ஆற

வைத்து,  சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில்  அரைக்கவும் . 


வேக வைத்துள்ள காய்கறிகளுடன்   அரைத்ததை விட்டு  , சிறிது  நேரம் 

கொதித்தவுடன் , ... கடுகு, கறிவேப்பிலையை   தாளித்து   அதில்

சேர்க்கவும். எல்லாம்   ஒன்றாகக்   கலந்து   வந்ததும் இறக்கிப்  

பரிமாறவும்.


 உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால்  வயிற்றுக்கு இதமாக

இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையது .

கீரை பொரித்த குழம்பு


தேவையான பொருட்கள் :


1.  முளைக்கீரை   ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )-   1 கப்

2.  நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரை  - 
                                       ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )-   1 கப்

3.  முருங்கைக்கீரை   ஆய்ந்தது   -  1 கப் 

4.  துவரம்பருப்பு   -  1/2 கப்

5.  பாசிப்பருப்பு  -  1/2 கப்

6.  தேங்காய்த்துருவல்   -  4 தேக்கரண்டி

7.  சீரகம்  -  1 தேக்கரண்டி

8.   மிளகு  -  1/2 தேக்கரண்டி

9.  கடுகு   -  1/2 தேக்கரண்டி

10  உளுத்தம்பருப்பு   -  1/2 தேக்கரண்டி

11.  எண்ணெய்  -  2 தேக்கரண்டி

12.  பெருங்காயத்தூள்   -  சிறிதளவு

13.  உப்பு  -  தேவையான அளவு


செய்முறை  :



குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு   வேக  வைத்து 4 விசில்

வந்ததும் இறக்கவும்.  கீரைகளை  உப்பு சேர்த்து வேகவிடவும் .


கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த்துருவல் , சீரகம், மிளகு

மூன்றையும் வறுத்து நைசாக அரைத்து, வேக வைத்த கீரையுடன்

கலக்கவும்.



அதில் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும் .  கடுகு,

உளுத்தம்பருப்பு , பெருங்காயத்தூள்  தாளித்துக் கொட்டி கலந்து

இறக்கவும்.



குறிப்பு :  இதற்கு மாங்காய் இனிப்பு பச்சடி சிறந்த ஜோடி .

மேலும்   உணவில் பருப்பு எப்பொழுது சேர்த்தாலும் பசுநெய்யுடன்

சாப்பிடுவதே சிறந்தது.


கீரை பொரித்த குழம்பு  வயதானவர்களுக்கு  மலச்சிக்கல்  ஏற்படாமல் 

தடுக்கும்..




































       

வெந்தய தோசை


தேவையான பொருட்கள் :


1. புழுங்கல் அரிசி   -   200 கிராம் (1 ஆழாக்கு)

2. வெந்தயம்  -  4 தேக்கரண்டி (டீஸ்பூன்)

3. உளுத்தம்பருப்பு  -  1 தேக்கரண்டி

4.  எண்ணை    அல்லது பசுநெய் - தேவையான அளவு

5.  உப்பு   -  சுவைக்கேற்ப

செய்முறை:



புழுங்கல் அரிசி  , வெந்தயம்  ,  உள்ளுத்தம்பருப்பு  மூன்றையும் ஒரு

மணி நேரம்  ஒன்றாக ஊற வைத்து ,  சுத்தம் செய்து  அரைக்கவும்.

பிறகு  தேவையான அளவு உப்பு சேர்த்துக்  கலந்து , புளிக்க விடவும் .


தோசைக்கல்லில்  சிறிய தோசைகளாக வார்த்து , இருபுறமும்

எண்ணை   அல்லது பசுநெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு

எடுக்கவும்.


புதினா சட்னி , கொத்துமல்லி சட்னி சிறந்த காம்பினேஷன் ...



வெந்தயம் குளிர்ச்சி தந்து , உஷ்ணத்தைக் குறைக்கும் .  வயிற்றுவலி

குணமாகும்,

Sunday, 9 December 2012

ஆரஞ்சுத் தோல் துவையல்



தேவையான பொருட்கள்:


1.  கமலா ஆரஞ்சு தோல்   -  1  கைப்பிடி அளவு

2.  இஞ்சி  -  சிறிய துண்டு

3.  காய்ந்த மிளகாய்  - 1 

4.  உளுத்தம்பருப்பு   -  1 தேக்கரண்டி 

5.  எண்ணை   ,  உப்பு  - தேவையான அளவு

 

செய்முறை:


அரஞ்சுப்பழத் தோலை பொடியாக   நறுக்கவும்  .  கடாயில்  எண்ணெய்  

விட்டு   அதை நன்கு வதக்கவும்.  இஞ்சியை  தோல் சீவி பொடியாக

நறுக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பை

போட்டு வறுக்கவும் .  வதக்கிய ஆரஞ்சுத் தோல் , இஞ்சி , காய்ந்த

மிளகாய் உளுத்தம்பருப்பு ஆகியவற்றுடன்   உப்பு சேர்த்து மிக்ஸ்யில்

தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.


 சூடான சாதத்தில் இந்த துவையலை  போட்டு எண்ணெய்   விட்டு

சாப்பிட்டால் கமலா அரஞ்சு வாசனையுடன் மிகவும் ருசியாக

இருக்கும்.

வாழைத்தண்டு சாலட்



தேவையான அளவு :


1.  வாழைத்தண்டு  - 1 கப் பொடியாக நறுக்கியது

2.  மிளகுத்தூள்  -  1/4 தேக்கரண்டி 

3.  சீரகத்தூள்  -  1 தேக்கரண்டி 

4.  எலுமிச்சை சாறு    -  1  தேக்கரண்டி 

5.  தென்கைத்துருவல்  -  1/2  கப் 

6.  கேரட் துருவல்  -  2  தேக்கரண்டி  

7.  கொத்துமல்லி -   பொடியாக நறுக்கியது  1  தேக்கரண்டி

8.  கறிவேப்பிலை  -  பொடியாக நறுக்கியது  1  தேக்கரண்டி


செய்முறை :


பொடியாக நறுக்கிய வழைத்தண்டுடன்  இரண்டு கப் தண்ணீரும்  

எலுமிச்சை சாறும் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.   பின்பு 

வாழைத்தண்டுத்  துண்டுகளைப்   பிழிந்து எடுத்து வேறொரு  

பாத்திரத்தில்  போடவும்.  இதனுடன் தேங்காய், கேரட் துருவல்களையும்

கலந்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து மிளகு, சீரகத்தூளுடன் ஒரு

சுற்று நன்றாக கிளறவும் .  கலவையை தட்டில் பரப்பினால் சாலட்  

அவ்வளவுதான் .


வாழைத்தண்டு சாலட் கல் நீக்கியாகவும் செயல்படுகிறது. மலச்சிக்கல்,

நீரிழிவு நோய்களுக்கு   சிறந்த மருந்து.








தேங்காய்பொங்கல் 


தேவையான அளவு :


1.  அவல்  -  1 கப்

2.  தேங்காய் துருவல்  -  1 கப்

3.  மிளகுத்தூள் -  1/4   தேக்கரண்டி

4.  சீரகத்தூள்   -   3/4 தேக்கரண்டி 

5.  பசுநெய்   -  2  தேக்கரண்டி

6.  முந்திரி பருப்பு  -  3  தேக்கரண்டி

7.  உப்பு -  சுவைக்கேற்ப


செய்முறை :


அவலை  தேவையான அளவு தண்ணீர்   சேர்த்து   பத்து  நிமிடம்  

ஊறவைக்கவும் .  பின்பு   இதனுடன்  தேங்காய்த்துருவல் ,  மிளகுத்தூள் ,

சீரகத்தூள் , உப்பு ஆகியவற்றை   கொட்டி, நெய்யில் வறுத்த

முந்திரியையும்  போட்டு மொத்தக் கலவையையும்  லேசாகக் 

கிளறினால்   அதுவே தேங்காய் பொங்கல்.


குடல் புண்  உள்ளவர்களுக்கு சிறந்த உணவு. காலை உணவாக  இதை 

உட்கொண்டால்  வயறு இதமாக இருக்கும். 














சுண்டைக்காய் குழம்பு

 

தேவையான பொருட்கள் :


1. பிஞ்சு சுண்டைக்காய்  -  ஒரு கைப்பிடி அளவு

2. புளி   -  எலுமிச்சம்பழ  அளவு

3.  வெந்தயம்  - 1/4  தேக்கரண்டி

4.  கடுகு  -  1/4  தேக்கரண்டி

5.  சாம்பார் பொடி   -  3  தேக்கரண்டி

6.  கடலைப்பருப்பு   -  ஒரு தேக்கரண்டி

7.  கறிவேப்பிலை   -  சிறிதளவு

8.  நல்லெண்ணெய்   -  தேவையான அளவு

9.  உப்பு  -  தேவையான அளவு


செய்முறை:


 கடாயில் நல்லெண்ணெய் விட்டு , லேசாக நசுக்கிய 

சுண்டைக்காயைப்  போட்டு  நன்கு  வதக்கி எடுத்துக் கொள்ளவும். 


அதே  கடாயில்  எண்ணை விட்டு  கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு 

தாளித்து  அதில் சாம்பார்   பொடி சேர்த்து வதக்கவும்.


புளியைக் கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர் , வதக்கிய

சுண்டைக்காய் , உப்பு  சேர்த்துக்  கலக்கி  கொதிக்க விடவும் .  எண்ணை 

பிரிந்து  வரும்  போது ,  கறிவேப்பிலை  தூவி இறக்கவும்.  மிகுந்த   

மணத்துடன்  பார்க்கும்போதே சாப்பிட  தூண்டும்.



பித்தம் , சர்க்கரை அதிகமுள்ளவர்களுக்கு  சுண்டைக்காய் எளிய வரப்பிரசாதம்.

இதே போல் சுண்டைக்காய் வற்றல் குழம்பும் செய்யலாம் .
















இஞ்சித் துவையல்

 

தேவையான பொருட்கள் :

1. இஞ்சி  -  பெரிய துண்டு,

2. காய்ந்த மிளகாய் - 2

3. உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

4. கறிவேப்பிலை  -  ஒரு கைப்பிடி அளவு

5. புளி  - பெரிய நெல்லிக்காய் அளவு

6.  எண்ணை - வதக்க தேவையான அளவு

7. உப்பு - சுவைக்கேற்ப

 

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்  .  கடாயில் எண்ணை 

விட்டு இஞ்சி, கறிவேப்பிலையை  வதக்கவும்.  காய்ந்த மிளகாய்,

உளுத்தம்பருப்பை  தனியாக வறுக்கவும்.


வதக்கிய, மற்றும் வறுத்த பொருட்களை ஒன்றாக்கி, அவற்றுடன்  புளி ,

உப்பு சேர்த்து மிக்ஸ்யில் கெட்டியாக அரைக்கவும் .


சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.  சளி,

இருமல்,  போன்ற உபாதை  இருக்கும் போது சாப்பிட சீக்கிரம்

குணமாகும்.  மலச்சிக்கல் இருக்காது.












Sunday, 25 November 2012

காப்ஸிகம்  ரைஸ் ( குடமிளகாய் சாதம்)

 

தேவையான அளவு: 

1. சாதம் - 1 கப்

2. குடமிளகாய் - 1 (50  கிராம் )

3. வெங்காயம் - 1

4. பச்சைமிளகாய் - 1

5. பூண்டு - 10 பல்

6. இஞ்சி - சிறிய துண்டு

7. கடுகு - 1/4 தேக்கரண்டி (டீஸ்பூன்)

8. எண்ணை - தேவையான அளவு

9. உப்பு -  தேவைக்கேற்ப

 

செய்முறை:

வெங்காயம், குடமிளகாய்,  இஞ்சி, ஆகியவற்றை பொடியாக

நறுக்கிக்கொள்ளவும் . பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும்.


கடாயில் என்னை விட்டு  கடுகு போட்டு தாளிக்கவும் . நறுக்கிய

வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு ,

பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை

வதக்கவும்.


பிறகு  பொடியாக நறுக்கிய குடமிளகாய் , உப்பு போட்டு நன்றாக

கலக்கவும்.  சிறிது நேரம் மூடி வைத்து பிறகு ஒன்றாக கலந்து

வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


இந்த கலவையில் சூடான சாதத்தை போட்டு கலக்கவும்

காப்ஸிகம் ரைஸ் தயார் .





Friday, 16 November 2012

ஜிஞ்சர்  சூப்

தேவையான பொருட்கள் :


1. துருவிய இஞ்சி  - 1/4  கப்

2. துருவிய கேரட் , முட்டைகோஸ் ( கலந்தது )  - 1/2  கப்

3. கைக்குத்தல் அரிசி  -  3  மேஜைக்கரண்டி

4. மிளகுத்தூள்  - 1/ 2  மேஜைக்கரண்டி

5. சீரகத்தூள்  -  1/2  மேஜைக்கரண்டி

6. வெங்காயத்தாள்   - சிறிதளவு

7. எண்ணை   - 1  மேஜைக்கரண்டி

8. உப்பு - தேவையான அளவு

செய்முறை :


கைகுத்தல் அரிசியை  மிக்ஸ்யில்  போட்டு  சன்னமான ரவை போல்

அரைக்கவும்.  வெங்காயத்தாளை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில்  எண்ணை விட்டு  இஞ்சி,  கேரட்,  முட்டைகோஸ்  மூன்றையும் 

நன்கு வதக்கவும்.  பிறகு குக்கரில் அதை  கொட்டி  அத்துடன் 

கைக்குத்தல்அரிசி  ரவையை  போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி 

குக்கரை மூடவும் . ஒரு விசில் வந்ததும்  இறக்கி விடவும் .  சிறிது  நேரம் 

கழித்து  குக்கரை  திறந்தவுடன்  , மிளகுத்தூள்,  சீரகத்தூள்,  உப்பு சேர்த்து 

ஒரு  கொதி வைத்து  இறக்கி  வெங்காயத்தாளை போட்டு  இரண்டு

நிமிடம்   மூடிவிடவும்.



சாபிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவது நல்லது.  ஜிஞ்சர் சூப்   நல்ல பசியை தூண்டும் , 



வேப்பம்பூ  பொடி

தேவையான பொருட்கள் :


1. வேப்பம்பூ  -  1 ஆழாக்கு   (200கிராம்)

2. தனியா  - 1/4  ஆழாக்கு (50 கிராம்)

3. மிளகு - 1/2  தேக்கரண்டி ( டீஸ்பூன் )

4. மிளகாய் வற்றல்   - 4 அல்லது 5

5. பெருங்காயம்   -  1/4  தேக்கரண்டி

6. உப்பு - தேவையான அளவு

செய்முறை :


வேப்பம்பூவை  சிவக்க வறுக்கவும்  .  தனியா , மிளகு ,  மிளகாய்

வற்றல் ,  பெருங்காயம்  ஆகியவற்றையும்  வறுக்கவும் .  பிறகு

எல்லாவற்றையும் சேர்த்து  , உப்பு போட்டு , மிக்ஸ்யில்  அரைத்தால்... 

வேப்பம்பூ   பொடி   தயார்.


சாதத்தில்  பசுநெய் விட்டு , தேவையான அளவு வேப்பம்பூ பொடியை 

சேர்த்து  கலந்து சாப்பிட்டால்  மிகவும் ருசியாக இருக்கும்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள்   வாரம் ஒருமுறை  வேப்பம்பூ பொடி  

உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 

உணவில் அறுசுவையும் இருக்க வேண்டும் கசப்பும் ஒரு சுவைதான் 

அது   உடலுக்கு அதிக நன்மையை அளிக்கவல்லது.









முளைக்கட்டிய முப்பயறு அடை

 

தேவையான பொருட்கள் :


1. முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/2 கப்

2. முளைக்கட்டிய கொள்ளு - 1/2 கப்

3. முளைக்கட்டிய தட்டைப்பயறு  - 1/2 கப்

4. பச்சரிசி மாவு  - 1/2 கப்

5. மசித்த உருளைக்கிழங்கு  - 1/2 கப்

6. உருவிய முருங்கைக்கீரை  - 1/2 கப்

7. நறுக்கிய  வெங்காயம்  -1 கப்

8. பச்சை மிளகாய் - 3   பொடியாக   நறுக்கிக்கொள்ளவும்

9. காய்ந்த மிளகாய்  - 3  கிள்ளிக்கொள்ளவும்

10. சோம்பு  -  2  தேக்கரண்டி (டீஸ்பூன் )

11. தேங்காய் துருவல்  -  1/2 கப்

12. பெருங்காயம்  - 1 சிட்டிகை

13. எண்ணை  அல்லது   பசுநெய்   - தேவையான அளவு

14. உப்பு - தேவையான அளவு


செய்முறை :

மூன்று பயறுகளையும்  பன்னிரெண்டு மணி நேரம் ஊற வைத்து ,

தண்ணீரை வடிகட்டி  மீண்டும் பன்னிரெண்டு மணி நேரம் முளைக்கட்ட

விடவும்.


பிறகு  நன்றாக முளைக்கட்டிய மூன்று பயறுகளையும் எடுத்து , உப்பு,

சோம்பு , சேர்த்து கரகரப்பாக  அரைக்கவும்.


அரைத்த மாவுடன்   பச்சரிசி மாவு,  மசித்த உருளைக்கிழங்கு , 

முருங்கைக்கீரை ,  வெங்காயம்  , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ,

தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து  அடை மாவு  பதத்துக்கு 

கரைக்கவும்.


அடுப்பில் தோசைக்கல்  வைத்து  காய்ந்ததும்   மாவை  ஊற்றி  எண்ணை

விட்டு , இருபுறமும் வேக வைத்து   எடுக்கவும்

சூடான அடை மேல்  வெண்ணெய்  போட்டும் சாப்பிடலாம்.



ஊட்டசத்து மிக்க உணவான இது உடலுக்கு பலத்தையும், 

ஆரோக்யத்தையும் கொடுக்க கூடியது . எளிதில் ஜீரணமாவதால்  

வயதானவர்களும் சாப்பிடலாம்.

























Monday, 12 November 2012

தண்டுகீரைப்   பொரியல்:

தேவையான பொருட்கள்:

1. தண்டுகீரை  -   1 கட்டு 

2. தேங்காய் துருவல் -   3 மேஜைக்கரண்டி 

3. பெரிய வெங்காயம்  -  ஒன்று  (பொடியாக நறுக்கவும் )

4. மிளகுத்தூள்  -   1/4  மேஜைக்கரண்டி 

5. பெருங்காயத்தூள்  -   சிறிதளவு 

6. உப்பு -   தேவையான அளவு 

தாளிக்க :
கடுகு , உளுத்தம்பருப்பு - தலா கால் மேஜைக்கரண்டி , 
காய்ந்த மிளகாய்  - 2,   எண்ணை - தேவையான  அளவு .

செய்முறை:

 தண்டுக்கீரையை  ஆய்ந்து ,  தண்டை  நார் நீக்கிப்  பொடியாக  நறுக்கி  தண்ணீரில் அலசவும்.  

 

கடாயில் எண்ணை  விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு,  காய்ந்த  மிளகாய்  தாளித்து , வெங்காயத்தை  போட்டு  வதக்கவும்.  அதில் நறுக்கிய  கீரைத்தண்டைப்  போட்டு,  பெருங்காயத்தூள் , உப்பு சேர்த்து  லேசாகத் தண்ணீர் தெளித்து  மூடி  வைத்து, வேக  விடவும் .

 

அடுப்பில்  இருந்து  இறக்கும்  முன்  மிளகுத்தூள், தேங்காய்  துருவல் போட்டுக்  கிளறி இறக்கவும் .

 தண்டுக்கீரையில்  இரும்புச்சத்து அதிகம் உள்ளது .

 







கொள்ளு  பொடி :

தேவையான பொருட்கள் :


1. கொள்ளு பயறு -  100  கிராம் 

2. மிளகு -  ஒரு தேக்கரண்டி 

3. காய்ந்த மிளகாய்  - 4 

4. உளுத்தம்பருப்பு  - 4 தேக்கரண்டி 

5. பெருங்காயத்தூள்  - சிறிதளவு 

6. உப்பு - தேவையான அளவு 


செய்முறை :

கடாயில்  கொள்ளு  பயறை  தனியாக  வறுத்துக்கொள்ளவும்.

மிளகு, காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பு  ஆகியவற்றை 

 தனி தனியாக  வறுத்துக்  கொள்ளவும்.

 

இவை  எல்லாவற்றையும்  கலந்து  மிக்ஸ்யில்  நன்கு 

 பொடித்து , பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்துக்  கலக்கவும்.

 

சாதத்தில்  இந்த பொடியை  போட்டு  சிறிது பசுநெய்  விட்டு 

சாப்பிட்டால்  மிகவும் ருசியாக இருக்கும்.


இந்த பொடி , கொலஸ்ட்ராலைக்  குறைக்கவும், இடுபெலும்பை வலுப்படுத்தவும்  பயன்படுகிறது.




Sunday, 11 November 2012

தூதுவளை தோசை:

தேவையான பொருட்கள்:


1. புழுங்கலரிசி -  1 கப்

2. தூதுவளை இலை - 15

3. மிளகு - 10

4. சீரகம் - 1/2 தேக்கரண்டி

5. பச்சை மிளகாய்  - 2

6. உப்பு - தேவைக்கேற்ப

7. எண்ணை + பசுநெய் - தேவையான அளவு.

செய்முறை:


புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸ்யிலோ அல்லது ஆட்டுகல்லிலோ பச்சை மிளகாய், மிளகு சீரகம், தூதுவளை இலை உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.

பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக  மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி பசுநெய் + எண்ணையைக்  கலந்து அதை, சுற்றிவர ஊற்றி,  திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். 

மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை.  ஆனால் சூடாக சாப்பிட்டால்தான் சுவை.




 

கேழ்வரகு தோசை :


தேவையான பொருட்கள்:


1. கேழ்வரகு மாவு - 1 கப்

2. ஆட்டிய  உளுத்தம்பருப்பு மாவு - 1/2 கப்

3. சிறிய வெங்காயம் - 15

4. பச்சை மிளகாய்  - 2

5. சீரகம் - 1/2 தேக்கரண்டி

6. எண்ணை - தேவையான அளவு


செய்முறை:


கேழ்வரகு மாவு, உளுத்தமாவு, உப்பு  ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும்.(அதாவது 12 மணி நேரம்).

வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.

மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, சீரகத்தையும்  அரைத்து  மாவில்  போடவும்.

தோசைக்கல்லை  காயவைத்து  மெல்லிய  தோசைகளாக  ஊற்றி  சூடாக  இருக்கும்போதே  பரிமாறவும். இதற்கு  காரச் சட்னி ஏற்ற ஜோடி .













கம்பு தோசை :


தேவையான பொருட்கள் :


1. புழுங்கலரிசி - 1 கப்

2. கம்பு  - 1 கப்

3. சிறிய வெங்காயம்  - 15

4. பச்சைமிளகாய்  - 2

5. சீரகம் - 1 டீஸ்பூன்

6. உப்பு - சுவைக்கேற்ப

7. நல்லெண்ணெய் - தேவையான அளவு

8. கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கம்பையும் , அரிசியையும் ஒன்றாக ஊறவிடுங்கள். வெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளுங்கள் .  அரிசி, கம்பு கலவை நன்கு ஊறியதும், வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கலந்து,      2 மணி நேரம் புளிக்கவையுங்கள் . பின்னர் மெல்லியதாகவோ, கனமாகவோ தோசையாக ஊற்றி எடுங்கள். மணமும், சுவையும் நன்றாக இருக்கும்.

வெங்காய சட்னி , தக்காளி சட்னி  இதற்கு சிறந்த சைட் டிஷ்


சர்க்கரை வியாதி உள்ளவர்களும் மற்றவர்களும் இதை காலை உணவாக எடுத்துக்  கொள்ளலாம்.




சத்துமாவு சப்பாத்தி :


தேவையான பொருட்கள் :


1. கோதுமை  - 2 கிலோ

2. சோளம் - 1/4 கிலோ

3. கேழ்வரகு  - 1/4 கிலோ

4. கறுப்பு  உளுந்து - 1/4 கிலோ 

5. உப்பு - தேவையான அளவு 

6. நல்லெண்ணெய்  - தேவையான அளவு 


செய்முறை : 

கோதுமையையும் , மற்ற தானிய வகைகளையும் ஒன்றாகக் கலந்து

வெயிலில் உலர்த்துங்கள். பிறகு அவற்றை மிஷினில் கொடுத்து

மாவாக அரைத்துக்  கொள்ளுங்கள்.


தேவையானபோது  , இந்த மாவிலிருந்து ஒரு கப் அளவு எடுத்து, உப்பு

சேர்த்து சப்பாத்தி மாவைப் போலப்  பிசைந்து கொள்ளுங்கள் .


சிறு சிறு  சப்பாத்திகளாக தேய்த்து , தோசைக்கல்லில் போட்டு 

சுட்டெடுங்கள் .


சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முதல் அனைவரும் விரும்பி உண்ண ஏற்றது.





முளைப்பயிறு பப்பாளிக்காய் சாலட்

 

தேவையான பொருட்கள் :


1. முளைவிட்ட பாசிபயிறு - 1/2 கப்

2. கேரட்  - 1

3. சிறிய பப்பாளிக்காய்  - பாதி

4. மல்லித்தழை  - சிறிது

5. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

6. எழுமிசைப்பழச் சாறு  - 1 மேஜைக்கரண்டி

7. உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

கேரட், பப்பாளிக்காயை தோல்  சீவி, துருவிக் கொள்ளுங்கள்.

முளைப்பயிரை   ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சுவைக்கேற்ப  உப்பு  மிளகு தூள்

சேர்த்து பரிமாறுங்கள் .


எளிதில் ஜீரணமாகும் , காலை உணவுக்கு ஏற்றது . சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு  சிறந்த உணவு .

Friday, 2 November 2012

கேரட் மாங்காய் சாதம் (carrot mango rice )

தேவையான பொருட்கள்:

1. கேரட் - 100 கிராம்

2. மாங்காய் - 100 கிராம்

3. அரிசி  - 1 ஆழாக்கு  (2 கப் )

4. நல்லெண்ணெய்  -  4  மேஜைக்கரண்டி

5. கடுகு - 1/2 தேக்கரண்டி

6. கடலைப்பருப்பு  - 1 தேக்கரண்டி

7. உளுத்தம்பருப்பு  - 1 தேக்கரண்டி

8. காய்ந்த  மிளகாய்  - 4

9. பச்சை மிளகாய்  - 1

10. பெருங்கயத்தூள்  - 1 சிட்டிகை

11. மஞ்சள் தூள்  - 1 சிட்டிகை

12. கறிவேப்பிலை  சிறிதளவு

13. உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

அரிசியை கழுவி வேக வைத்து சாதம் உதிரி உதிரியாக இருக்கும்படி

வடித்துக்கொள்ளவேண்டும்.  குக்கரிலும் செய்யலாம்.


கேரட் மற்றும் மாங்காயை துருவிக்கொள்ளவும்.  வெங்காயத்தை

பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .


அடுப்பில்  வாணலியை வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் இரண்டு

மேஜைக்கரண்டி விடவும்.  கடுகு,கடலைப்பருப்பு,, உளுத்தம்பருப்பு,  போட்டு

தாளிக்கவும். கொஞ்சம் சிவந்ததும் , காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்,

பெருங்காயத்தூள்  1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1 சிட்டிகை  போட்டு வதக்கவும்,

பிறகு வெங்காயம், கறிவேப்பிலையை  கொட்டி சிறிது நேரம் வதக்கவும்,

வெங்காயம் வதங்கியதும் கேரட், மற்றும், மாங்காயை போட்டு கிளறவும்.

இரண்டு நிமிடம் மூடி வைத்து பிறகு இறக்கவும்.


சாதத்தை ஒரு பேசினில் கொட்டி  கேரட், மாங்காய்  கலவையை அதில்

கொட்டி, தேவையான அளவு  உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.


குழைதைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  புளிப்பு, காரம், இனிப்பு, உவர்ப்பு என

அனைத்து சுவையும் கலந்த சாதமாக இது இருக்கும்

கருவுற்ற பெண்களுக்கு பிடித்த உணவாக இது அமையும்.



































Tuesday, 30 October 2012

தேங்காய்பால் கேரட் அல்வா


தேவையான பொருட்கள் :

1. கேரட் -1/4 kg

2. தேங்காய்-1/2 முடி

3. கல்கண்டு  தூள் செய்தது - 1 ஆழாக்கு (200 கிராம்)

4. பசுநெய்  - 50 கிராம்

5. முந்திரி  - 25 கிராம்

6. திட திராட்சை  -  25 கிராம்

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும், துருவிய தேங்காயை மிக்ஸ்யில்

போட்டு  சிறிது  வெந்நீர்  விட்டு  அரைத்து -100ml  கெட்டியான பால்

எடுக்கவும் .

 

கேரட்டை துருவிக்கொள்ளவும், அடுப்பில் வாணலியை வைத்து

இரண்டு தேக்கரண்டி பசுநெய் விட்டு  காய்ந்ததும் துருவிய கேரட்டை

போட்டு கிளறவும்.  கேரட்  கொஞ்சமாக வதந்கியதும்   தேங்காய்பால்

விட்டு  இரண்டு  நிமிடம்  கிளறி  மூடிவைக்கவும் .

 

இரு நிமிடம்  கழித்து தூள் செய்த கல்கண்டை கொட்டி கிளறவும் .

சிறிது  சிறிதாக  பசுநெய்  விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். 

கல்கண்டு  நீர்த்து   மீண்டும்  இறுக  ஆரம்பிக்கும்,  அப்போது  

முந்திரி , திராட்சை  இரண்டையும்  பசுநெய்யில்  வறுத்து  கேரட் 

அல்வாவில்  போட்டு  ஒரு கிளறு கிளறி இறக்கவும். மிகவும்

சுவையான  கேரட் அல்வா தயார்.

 

இந்த அல்வா குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும்

விரும்பி   சாப்பிடுவார்கள்.  ஊட்டசத்து மிகுந்த உணவு , 

தேங்காய்பாலும் , கல்கண்டும்  இயற்கை உணவு என்பதால் எளிதில்

ஜீரணித்து வயிறு இதமாக இருக்கும்.  மேலும் இது  இரத்த விருத்தியை

ஏற்படுத்தும்.








Sunday, 28 October 2012

முருங்கைக்காய் சூப் :


தேவையான பொருட்கள் :


1. முருங்கைக்காய் - ஒன்று

2.  கைக்குத்தல் அரிசி ரவை போல் பொடித்தது - 3 மேஜைகரண்டி

3. மிளகு தூள் சிறிது

4. உப்பு சுவைக்கேற்ப

5. கொத்தமல்லி சிறிது


செய்முறை :

முருங்கைக்காயை நன்கு கழுவி நான்கு ஐந்து துண்டுகளாக நறுக்கி

இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  முருங்கைக்காய்

வெந்தவுடன் முருங்கை துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து விடவும்.


பிறகு முருங்கை வெந்த தண்ணீரில் அரைத்த கைக்குத்தல்  அரிசியை

போட்டு  வேக வைக்கவும். அதே நேரத்தில் வெந்த முருங்கை

துண்டுகளின் விழுதுகளை எடுத்துக்கொள்ளவும்.


அரிசி வெந்தவுடன் அதில் இந்த விழுதுகளை போட்டு இரண்டு நிமிடம்

கொதிக்க விட்டு உப்பு போட்டு இறக்கவும்.

பரிமாறும் போது மிளகு தூள், கொத்தமல்லி  சேர்த்துக் கொள்ளவும்.

இந்த சூப் மிகுந்த மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். நன்கு ஜீரண

சக்தியை ஏற்படுத்தும், வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

இந்த சூப் செய்ய 10 நிமிடம் போதுமானது.
















கைக்குத்தல் அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள் : 

1. கைக்குத்தல் அரிசி - 1/2 கப்

2. மிளகு தூள் சிறிது

3. உப்புத்தூள் சுவைக்கேற்ப


செய்முறை :
  
    கைக்குத்தல் அரிசியை மிக்ஸ்யில் போட்டு சன்னமான ரவை பதத்துக்கு

அரைக்கவும்.  மூன்று டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி

கொதிக்க வைக்கவும் பிறகு  அதில் அரைத்த கைக்குத்தல் அரிசியை

போட்டு சிறு  தீயில் வேக விடவும்.  அரிசி  வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி

விடவும்.

 பரிமாறும் போது சிறிது மிளகு தூள் போட்டு  கொள்ளவும்.

எளிமையான கஞ்சி தயார்.

 இந்த கஞ்சி அரிசி நொய் கஞ்சியை போன்று சப்பென்று இல்லாமல்

ருசியாக இருக்கும்.  வயிறு நிறைந்தாலும் காலியாக இருப்பது போல்      

 light weight ஆக இருக்கும்.



Saturday, 27 October 2012

முளைக்கட்டிய கொள்ளு சுண்டல் 

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு -1 கப் 

2. தண்ணீர் 

3. மிளகுதூள்  சிறிதளவு 

4. உப்புத்தூள் சிறிதளவு 

5. பசுநெய்  - 1 தேக்கரண்டி 

செய்முறை :1

     கொள்ளு தானியத்தை  ஒரு  பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 

12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு  தட்டை கவிழ்த்து

மூடி தண்ணீரை வடிக்க வேண்டும். அப்படியே 24 மணி நேரம்

விட்டுவிட்டால் கொள்ளு முளைக்கட்டியிருக்கும். இந்த முளைக்கட்டிய

கொள்ளு தானியத்தை முன்று நிமிடம் ஆவியில் வேக வைத்து

எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

ஒரு தேக்கரண்டி பசுநெய் விட்டு, சுவைக்கேற்ப மிளகுதூள், உப்புத்தூள்

சேர்த்து பரிமாற வேண்டும்.

 

இது சுலபமாக செய்யக்கூடியது ,மிகவும் ஆரோக்யமானது. இதில்

அதிக அளவில் dietary fibre  உள்ளதால் எளிதில் ஜீரணமாவதுடன் உடல்

எடையை குறைக்க உதவுகிறது.

 

செய்முறை :2

       முளைக்கட்டிய கொள்ளு தானியத்தை ஆவியில் வேக வைத்து

எடுத்துக் கொள்ளவேண்டும் . வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு

தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் சிறிது

கடுகு, உளுந்து ஒரு தேக்கரண்டி  ,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,

மிளகாய் ஒன்று ,  கருவேப்பிலை கொஞ்சம் சேர்த்து   தாளிக்கவும். 

முளைக்கட்டிய கொள்ளு, சுவைக்கேற்ப உப்பு  சேர்த்து  கிளறி இரண்டு

நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.

 

இதே சுண்டலை முளைக்கட்டாமல் வெறும் 18 மணி நேரம் ஊற

வைத்தும் செய்யலாம்.  

உணவின் தோற்றம்



நாம் இந்த உலகில் வாழ இன்றியமையாதது உணவு, உடை, உறைவிடம்.
இம்முன்றில் முதன்மையானது உணவு.  இது உயிர்களின் ஆதாரமாகவும், அடிப்படை தேடலாகவும் விளங்குகிறது இந்த உணவை நோக்கி ஆரம்பித்த பயணமே இன்று இந்த உலகம் இவ்வளவு விரிவடைய காரணமாக இருக்கிறது..

சாதாரணமாக கிழங்குகளையும் , கனிகளையும் இயற்கையாக உண்ட மனிதன், பிறகு  கிடைத்தவற்றை பக்குவப்படுத்தி  உண்ண கற்றுக்கொண்டான்.

நாக்கின் சுவையறிந்தவுடன் பக்குவப்படுத்துதலை (சமையலை ) ஒரு கலையாக பலவழிமுறைகளில்  செய்ய தொடங்கினான்.
அதனால் இந்த சமையற்கலை வளர்ந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல்லாயிரகணக்கான உணவு வகைகளை நமக்கு தந்திருக்கிறது.

உணவுகளை தயாரித்தலோடு இந்த  கலை  முடிவடைவது இல்லை  அதை உள்ளன்போடு பரிமாறுவதும் உண்பவர்களின் நலனை எண்ணுவதும்  கூட இதை சேர்ந்ததே.